கொரோனா தொடர்பில் ஒன்றாரியோ முதல்வரின் அவசர கோரிக்கை
கொரோனா பெருந்தொற்று தொடர்பில் ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மாகாணத்தில் மீளவும் கோவிட்19 பெருந்தொற்று நோய் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மக்கள் அனைவரும் முகக் கவசங்களை பயன்படுத்தமாறு முதல்வர் மக்களிடம் கோரியுள்ளார்.
ஆபத்தான சூழ்நிலை காணப்படும் சந்தர்ப்பங்களில் முடிந்தளவு முக கவசம் பயன்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
எவ்வாறெனினும், முக கவச பயன்பாட்டை கட்டாயப்படுத்துவது தொடர்பில் முதல்வர் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ஆரம்பம் முதலே சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண பிரதம சுகாதார அதிகாரி மருத்துவர் கிரன் மூரின் அறிவுறுத்தல்களை தாம் பின்பற்றி வருவதாகவும் அவரது ஆலோசனை வழிகாட்டல்களையே மக்களிடம் முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரட்போர்ட்டில் புதிய அதிவேக நெடுஞ்சாலை நிர்மானப் பணிகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் முக கவசம் பயன்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் பின்னணியில் முதல்வர் போர்ட் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் முக கவசம் அணிவதனை விரும்புவதாக அல்லது முக கவச பயன்பாட்டுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.