கனடாவில் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை திட்டம் நடைமுறைக்கு வருமா?
கனடாவில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் பணியாற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
றொரன்டோவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனமான அலிடா நிறுவனம் வாரத்தில் நான்கு நாட்கள் பணி என்ற திட்டத்தை பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இந்த பரீட்சார்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பரீட்சார்த்த முயற்சி வெற்றியடைந்துள்ளதாக அலிடா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஸ் வெயின்ரைட் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவன பணியாளர்களின் பரிந்துரைகள் மற்றும் கோவிட்19 பெருந்தொற்று காரணமாக இந்த வாரத்தில் நான்கு நாள் வேலை என்னும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பணியாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரி வெயின்றைட் தெரிவித்துள்ளார்.
சம்பளங்களை குறைக்காது வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலம் வரையறுக்கப்பட்டாலும் பணிகள் உரிய நேரத்தில் செய்து முடிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பரீட்சார்த்த முயற்சி கனடாவின் ஏனைய நிறுவனங்களிலும் முன்னெடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.