இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நால்வர் பலி
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இஸ்ரேலுக்கும் லெபனான் ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்தத்திற்கு மேலும் அழுத்தம் கொடுப்பதாக லெபனான் தரப்பு தெரிவிக்கிறது.
கடந்த நவம்பரில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த போதிலும், அண்மைய நாட்களில் ஹெஸ்பொல்லாவின் முக்கிய தளங்களில் ஒன்றான டாஹியே பகுதியில் இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை வகுக்க உதவிய ஹெஸ்பொல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும் இதுதொடர்பில் ஹெஸ்பொல்லா எந்தவித உடனடி பதிலையும் வழங்கவில்லை. எவ்வாறாயினும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளார்.