ஆப்கானிஸ்தானில் முன்னாள் பெண் எம்.பியை சுட்டுக் கொன்ற கும்பல்!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவில் (15-01-2023) அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிக்சூடு நடத்தி உள்ளனர்.
இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் விசாரணையை தொடங்கியிருப்பதாக காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
நபிஜாதா அச்சமற்ற சாம்பியன் என்று முன்னாள் எம்.பி. மரியம் சோலைமான்கில் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
"நபிஜாதா உண்மையான வழிகாட்டியாக திகழ்ந்தவர். வலிமையான, வெளிப்படையாகப் பேசுபவர். ஆபத்து சூழ்ந்தபோதும், நம்பியவர்களுக்காக நின்றவர்.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், அவர் தனது மக்களுக்காக இங்கேயே தங்கியிருந்து போராடுவதை தேர்ந்தெடுத்தார்" என மரியம் கூறியிருக்கிறார்.
கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் வசித்து வந்த நபிஜாதா (வயது 32), கடந்த 2018ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.