பாடசாலை பேருந்து மீது அதிவேக ரயில் மோதி விபத்து ; 4 பேர் பலி
பெல்ஜியத்தின் வடக்கு பகுதியில் பாடசாலை பேருந்து மீது அதிவேக ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் பிரஸ்ஸல்ஸிலிருந்து வடமேற்கே சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ரயில்வே கடவுப்பாதை ஒன்றில் நேற்று (27) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காலை நேரப் போக்குவரத்து நெரிசலின்போது பாடசாலை பேருந்து ரயில் பாதையை கடக்க முற்பட்ட வேளையில், மணிக்கு சுமார் 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த அதிவேக ரயில் பேருந்தின் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பேருந்து சாரதி, உதவியாளர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 குழந்தைகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து இடம்பெற்றபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து இதுவரை தெளிவாக தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, ரயில் அதிவேகத்தில் பயணித்த காரணத்தால் அதை உடனடியாக நிறுத்துவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும், மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததாகவும் பெல்ஜிய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.