எகிப்தில் கோர ரயில் விபத்து ; 7 பேர் உயிரிழப்பு, 112 பேர் வைத்தியசாலையில்
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில், சாரதி உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 112 பேர் காயமடைந்துள்ளனர்.
கெய்ரோவின் தெற்கே கீசா மாகாணத்தின் அல்-அய்யாத் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்துக்கு 70-க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீசாவிலிருந்து பையூம் நோக்கிப் பயணித்த ரயில், கெய்ரோவிலிருந்து தெற்கிலுள்ள அஸ்வான் நோக்கிச் சென்ற சேவை ரயிலின் பின்புறத்தில் மோதியுள்ளதாக எகிப்தின் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோதலுக்கு உள்ளான சேவை ரயில் அப்போது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. விபத்துக்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் வழக்கறிஞர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து வெளியாகியுள்ள படங்கள் மற்றும் காணொளிகளில், பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்த நிலையில் காணப்படுகின்றன.
குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல ரயில் விபத்துகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.