வெடித்த ஆகாய பலூன்... பல மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட பயணிகள்
ஆல்ப்ஸ் அருகே ஆகாய பலூனில் புறப்பட்ட குழு ஒன்று விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தில் அந்த ஆகாய பலூனின் சாரதி தூக்கி வீசப்பட, பயணிகள் அனைவரும் பல மைல்கள் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த பலூன் பின்னர் வனப்பகுதியில் விழுந்துள்ளது. சம்பவத்தை அடுத்து அவசர மருத்துவ உதவிக் குழுவினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர்.
ஆல்ப்ஸ் அருகே சனிக்கிழமை பகல் குறித்த விபத்து நடந்துள்ளது. இதில், அன்டெரெக் என்ற கிராமப்புற நகரத்தில் காயமடைந்த நான்கு பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். எஞ்சிய ஐவரும் மூன்று மைல் தொலைவில் ஸ்டாங் பகுதிக்கு அருகில் காணப்பட்டுள்ளனர்.
குறித்த பலூன் புல்வெளியில் தரையிறங்கவிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக ஆஸ்திரிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், விபத்திற்கு முன்னர் சாரதி மற்றும் இருவர் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 33 மற்றும் 60 வயதான இருவர் உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.