ஸ்தம்பிக்கும் அபாயத்தில் அமெரிக்க மருத்துவமனைகள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் ஏற்கனவே கொரோனா பரவலால் மருத்துவமனைகள் நிரம்பி வந்த நிலையில், தற்போது புதிய ஓமிக்ரான் மாறுபாடால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 44 மாகாணங்களில் ஓமிக்ரான் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார செயற்பாடுகளில் உதவுவதற்காக ஓஹியோ மாகாண நிர்வாகமானது தேசிய பாதுகாப்புப்படையினரின் உதவியை நாடியுள்ளது.
மட்டுமின்றி கன்சாஸ் மற்றும் மிசோரியில் அறுவை சிகிச்சைகளை மருத்துவமனைகள் தாமதப்படுத்தி வருகின்றன. புதன்கிழமை வரையிலான தரவுகளின் அடிப்படையில், ஒட்டுமொத்த அமெரிக்காவில் சராசரி 7 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக குளிர்வீசும் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை மட்டும் 21,900 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஹியோ மாகாணத்தில் வெள்ளிக்கிழமையில் புதிதாக 4,723 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.