இங்கிலாந்தில் கோர தாண்டவமாடும் கொரோனா; ஒரேநாளில் லட்சத்தை தாண்டிய பாதிப்பு!
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வரும் நிலையில் இங்கிலாந்தில் அதிகபட்ச அளவாக ஒரேநாளில் புதிதாக 1,06,122 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,47,473 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 99 லட்சத்து 22 ஆயிரத்து 480 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15,77,420 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை வழக்கம் போல கொண்டாடலாம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) தெரிவித்திருந்தார்.
எனினும் கிறிஸ்துமஸ் முடிந்த பின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தனது வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.