இம்ரான் கான் தொடர்பில் அவரது சகோதரியின் அதிர்ச்சி பேட்டி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானை சிறையில் சென்று பார்த்த சகோதரி அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்தார். எதிர்க்கட்சிளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் 2023 ஆகஸ்ட் 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், ராணுவத் தளபதி அசிம் முனீர் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், நேற்று அன்று அவரைச் சந்தித்த பின் உஸ்மா கானும் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறியதாவது, "கடவுளின் அருளால் அவர் நலமாக இருக்கிறார். ஆனால், தனக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுவதால் அவர் கோபமாக இருக்கிறார். நாள் முழுவதும் அவர் தனது அறையிலேயே அடைத்து வைக்கப்படுகிறார்.
குறுகிய காலத்திற்குக் கூட வெளியே வரவோ, யாருடனும் பேசவோ அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
மேலும், தனது கைதுக்கும் தற்போதைய நிலைக்கும் காரணமான ராணுவத் தளபதி அசிம் முனீரை பாதுகாத்து அதிக அதிகாரம் வழங்க நாட்டின் அரசியலமைப்பை மறுசீரமைக்க முயற்சிகள் நடப்பதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியதாக உஸ்மா கானும் தெரிவித்தார்.
முன்னதாக இம்ரான் கானின் கட்சியினர் அவரின் நிலைமை குறித்து விளக்கம் கேட்டு ராவல்பிண்டியில் போராட்டம் நடத்த இருந்த நிலையில் நேற்றும் இன்றும் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.