இந்தியா - பிரித்தானியா உறவை இவ்வாறு மாற்ற விரும்புகிறேன்! ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்,(Rishi Sunak) வடக்கு லண்டனில் கன்சர்வேடிவ் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார்.
ஆப் சப் மேரே பரிவார் ஹோ (நீங்கள் அனைவரும் என் குடும்பம்) என்று அவர் இந்தி மொழியில் உரையை தொடங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியாவில் வணிகத்திற்கான பிரித்தானியாவின் வாய்ப்பைப் பற்றி நாங்கள் அனைவரும் நன்கு அறிந்திருக்கிறோம்,
ஆனால் உண்மையில் நாம் அந்த உறவை வித்தியாசமாகப் பார்க்க வேண்டும், ஏனென்றால் பிரித்தானியாவில் உள்ள நாம் இந்தியாவிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடியது பெரிய அளவு உள்ளது.
எங்கள் மாணவர்களும் இந்தியாவுக்குச் சென்று கற்றுக் கொள்வது எளிதானது என்பதையும், எங்கள் நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களும் ஒன்றாகச் செயல்படுவதும் எளிதானது என்பதையும் நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
இருப்பினும், இது ஒரு வழி உறவு மட்டுமல்ல, இது இரு வழி உறவு. அந்த உறவில் நான் கொண்டு வர விரும்பும் மாற்றமும் அதுதான். சீனாவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் நமது பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன.
சந்தேகமே வேண்டாம், உங்கள் பிரதமராக நான் உங்களையும், உங்கள் குடும்பங்களையும், நமது நாட்டையும் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்வேன், ஏனெனில் அது ஒரு பிரதமரின் முதல் கடமை. இவ்வாறு ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.