கனடாவில் சிகிச்சைக்காக 8 மணிநேரம் காத்திருந்த இந்தியர் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

ஆரம்பக்கட்ட பரிசோதனைகள்
பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள 'கிரே நன்ஸ்' மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவின் காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார்.
அவர் தொடர்ந்தும் கடுமையான வலி இருப்பதாக கூறியபோதிலும் அவருக்கு இ.சி.ஜி (ECG) பரிசோதனை செய்த ஊழியர்கள், அதில் ஆபத்தான அறிகுறிகள் ஏதுமில்லை என்று கூறி மீண்டும் காத்திருக்கச் கூறியதாக அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.
வலியால் துடித்த பிரசாந்திற்கு 'டைலனோல்' (Tylenol) மாத்திரைகள் மட்டுமே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது இரத்த அழுத்தம் மிகக் கடுமையாக உயர்ந்தும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுமார் 8 மணிநேரத்திற்கும் மேலான நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, பிரசாந்த் சிகிச்சை அறைக்குள் அழைக்கப்பட்டார்.
அங்கு சென்ற 10 வினாடிகளிலேயே அவர் தனது நெஞ்சைப் பிடித்தபடி சரிந்து விழுந்துள்ளார். அவருக்கு முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்பட்ட 'மாரடைப்பு' (Cardiac Arrest) மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு 3, 10 மற்றும் 14 வயதுகளில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ள போதிலும், உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.