ஒரு நல்ல எதிர்காலத்துக்காக கனடா வந்த இந்தியரை ஏமாற்றி கொலை செய்த மர்ம நபர்கள்
இந்தியாவிலிருந்து சரவதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை, ஏமாற்றி கொலை செய்துள்ளது ஒரு கூட்டம்.
கல்வி பயில்வதற்காக கனடா வந்த இந்தியரான குர்விந்தர் நாத் (Gurvinder Nath, 24), விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார்.
இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சா டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார் குர்விந்தர்.
ஆனால், உண்மையில் குர்விந்தரின் காரை திருடுவதற்காகவே சிலர் அவரிடம் போலியாக பீட்சா ஆர்டர் செய்துள்ளதாக கருதப்படுகிறது. குர்விந்தர் பீட்சா டெலிவரி செய்ய அங்கு சென்றதும், அங்கிருந்தவர்கள் அவரது காரைக் கடத்த முயன்றிருக்கிறார்கள். குர்விந்தர் தடுக்க, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
Submitted by Balram Chaudhary
குர்விந்தரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த மர்ம நபர்கள் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். கடுமையாக தாக்கப்பட்ட குர்விந்தரை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.
கோமா நிலையிலிருந்த குர்விந்தர், சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, ஜூலை 14ஆம் திகதி உயிரிழந்துவிட்டார்.
குர்விந்தரின் குடும்பத்தினர் இந்தியாவிலிருக்கும் நிலையில், அவரது மரணச் செய்தி அவரது தந்தை மற்றும் சகோதரரைச் சென்றடைந்துள்ளது. அவரது தாய்க்கு அவர் இறந்த செய்தி இன்னமும் தெரிவிகப்படவில்லை என கூறப்படுகிறது.
Peel Regional Police
மகன் கனடாவில் படித்து முடித்து, அவருக்கும் தங்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கும் என காத்திருந்த குர்விந்தரின் குடும்பம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளது.
இந்நிலையில், குர்விந்தரின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை பலர் தாக்கியிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், அவரைத் தாக்கியவர்களைத் தானாக முன்வந்து சரணடையுமாறு பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
எப்படியும் குர்விந்தரின் கொலையில் அவர்களுக்கு பங்கிருப்பதாக தெரிவித்துள்ள பொலிசார், சட்டத்தரணிகளுடன் வந்து சரணடையுமாறும், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குற்றச்செயலுக்கேற்றபடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.