ஹமாஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் மீதான தாக்குதல் ; இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
காசா பகுதியில் கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் பயங்கரத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் தொடர்ந்தும் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அன்றைய தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் ஹமாஸால் கடத்தப்பட்டனர்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் சிலர் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், மீதமுள்ள பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
இதில், ஹமாஸ் அமைப்பின் பல தலைவர்கள் இடறியுள்ளனர். அந்த அமைப்பின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மீது மேற்கொள்ளப்பட்ட 21 மாதங்களுக்கும் மேலான தாக்குதல்களில், தற்போது வரை 63,000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர், என காசா சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இஸ்ரேல் காசா நகரில் புதிதாக ராணுவ நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவின் செய்தி தொடர்பாளராக நீண்ட நாட்களாக இருந்த அபு ஒபெய்டா, இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கத்ஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பென்யாமின் நெதன்யாகு, வாராந்திர அமைச்சரவை கூட்டத்தில் பேசுகையில், "அபு ஒபெய்டா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அவர் உண்மையில் கொல்லப்பட்டாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை," என்றார்.