பிரான்சில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படும் நடைமுறை; மீறினால் கடும் நடவடிக்கை!
பிரான்ஸில் முதன்முறையாக தானியங்கி முறையில் இயங்கும் நவீன சுங்கச் சாவடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Montmarault நகரில் இருந்து Digoin நகரம் வரை பயணிக்கும் A79 நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைக்கமைய, வாகனத்தில் பயணிக்கும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தாமல், தொடர்ந்து பயணிக்க முடியும்.
அதற்கமைய, சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக கமராக்களும், சில நுண்திறன் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவிகள் வீதியில் பயணிக்கும் வாகனத்தின் இலக்கத்தகடுகளை அடையாளம் கண்டு, சுங்கவரியினை தொலைபேசியூடாக செலுத்துவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும்.
இந்த கட்டணத்தை செலுத்துவதற்கு சாரதிகளுக்கு 72 மணிநேர அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 72 மணிநேரத்துக்குள் செலுத்தவில்லை என்றால் 90 யூரோக்கள் குற்றப்பணமும், 60 நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால் 375 யூரோக்கள் குற்றப்பணமும் செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் காலை முதல் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளதாக பிரான்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது விரைவில் மேலும் சில நெடுஞ்சாலைகளுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடைமுறையை தொடர்ந்து நாடு முழுவதும் இது போன்ற வசதிகள் ஏற்படுத்துவதே இலக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமுலாகும் இந்த நடைமுறையின் கீழ் தடைகள் அல்லது சுங்க சாவடிகள் இருக்காது.
மேலும் கட்டணம் செலுத்த வேகத்தை குறைக்கவோ நிறுத்தவோ தேவையில்லை.