வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றி: விசித்திர அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
கத்தார் உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டித் தொடரில் ஈரான் அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஈரானின் இந்த வெற்றி, உலகக் கோப்பை தொடரில் வரலாற்று வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை ஈரான் அரசு அறிவித்து வருகிறது.
அந்த வகையில், தற்போது ஈரான் நீதித் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து 715 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். இதில் சிலர் சமீபத்தில் நடந்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இளம்பெண் மாஷா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஹிஜாப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.
போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் நீதித் துறை கூறுகிறது.
ஆனால், ஈரானில் சமீபத்திய போராட்டத்தில் 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.