சீன விமான விபத்து தொடர்பில் நீடிக்கும் மர்மம்!
கடந்த 21ஆம் திகதி சீனாவின் வனப் பகுதியில் விபத்துக்குள்ளான போயிங் ரக பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கண்பிடித்துள்ள சூழலில், விமான விபத்து குறித்து பல யூகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த 21ஆம் திகதி மதியம் புறப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளானது.
விமானம் குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
இதில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத் துறை தெரிவித்தது. விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புப் படையினரும், மீட்புக் குழுவினரும் போராடி தீயை அணைத்த பின்னர் , 3 நாட்களுக்குப் பிறகு விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கருப்புப் பெட்டியை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து வருகிறது. அதேவேளை விபத்துக்குள்ளான போயிங் விமானத்தை செலுத்திய முதன்மை பைலட் 6,709 மணி நேரங்கள் விமானத்தை ஓட்டிய அனுபவம் உடையவர் என கூறப்படுகின்றது. முதல் துணை விமானிக்கு 31,769 மணிநேரம் பயணம் அனுபவம் உள்ளது.
இரண்டாவது துணை விமானிக்கு 556 மணிநேரம் பறந்த அனுபவம் உள்ளது. விமான பைலட்கள் அனைவரும் இளைஞர்கள் அவர்கள் விமானத்தை செலுத்துவதற்கான அனைத்து திறனையும் பெற்றிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் அவர்களின் குடும்பங்களில் எந்த சிக்கலும் இருக்கவில்லையென்றும் தெரிவித்துள்ள நிலையில் இந்த விபத்து ஒர் மர்மமான சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், விமான விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping)உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.