பசியில் வாடும் ஐந்தில் ஒரு சிறுவர்: கடும் நெருக்கடியில் பிரிட்டன் தலைநகரம்
பொருளாதார நெருக்கடி காரணமாக லண்டன் சிறுவர்களில் ஐந்தில் ஒருவர் கடந்த மாதங்களில் பசியுடன் இருந்ததாக ஆய்வு ஒன்றில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கிட்டத்தட்ட அரை மில்லியன் இளம் வயதினர் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஆபத்தில் உள்ளனர் எனவும், விலைவாசி உயர்வே முதன்மை காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, 40% இளையோர்கள் உணவில்லாத சூழலையும் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 7ல் இருந்து 16 வயதுடைய சிறார்கள் சுமார் 280 பேர்களிடம் முன்னெடுத்த ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், லண்டன் நகரின் மொத்த இளையோர்களுடன் இதை ஒப்பிடுகையில், 426,500 சிறார்கள் போதிய ஊட்டச்சத்தின்றி அவதிக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.
இது அதிர்ச்சியளிக்கும் தகவல் என குறிப்பிட்டுள்ள நிபுணர்கள் தரப்பு, அரசாங்கம் துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதை தவிர்த்து, உணவு வங்கியின் உதவியை நாட பெரும்பாலான குடும்பங்கள் திட்டமிட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.