கோவிட்டை தொடர்ந்து மனநலம் பாதிப்பு
உலகில் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்படத் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தாண்டியுள்ள நிலையில், தொற்று பரவலின் தீவிரம் தற்போது மெல்ல தனிந்துள்ளது.
ஆனால் கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து மீண்டவர்களுக்கு நீண்ட கால கோவிட் பாதிப்பு என்ற சிக்கல் ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, மனநலம் சார்ந்த சிக்கல்கள் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு அதிகம் காணப்படுவதாக பிரபல மருத்துவ நாளிதழ் ஆய்வு கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறது.
அதாவது கோவிட் பாதிப்பில் இருந்து மீள சராசரியாக இரண்டு வாரம் தேவைப்படும் நிலையில் பொதுவாக கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு கோவிட் பாதிப்புகள் மற்றும் அதன் அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு இருக்கும்.
கோவிட் பிந்தைய நிலை
இதை கோவிட்க்கு பிந்தைய நிலை (post COVID condition) என்று WHO குறிப்பிடுகிறது. எனினும் சுகாதார வல்லுநர்கள் இந்த நிலையை லாங் கோவிட் கண்டிஷன் (long COVID condition) என கூறுகின்றனர்.
அதாவது லாங் கோவிட் என்பது SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு வழக்கத்தை விட நீண்ட காலத்திற்கு மக்கள் தொடர்ந்து கோவிட்-19 அறிகுறிகளை அனுபவிக்கும் நிலையாகும்.
இந்த லாங் கோவிட் பாதிக்கப்பட்ட சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட நபர்களின் உடல் நலன் குறித்து சர்வதேச நிறுவனமான லேன்செட் ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவின் படி கோவிட் பாதித்தவர்களின் நரம்பு மண்டலங்கள் அதன் நலன்களில் பிரச்சனை ஏற்பட்டு அது இரண்டு மாதங்கள் தொடங்கி சில வேளைகளில் இரண்டு ஆண்டுகள் வரை தாக்கம் தொடர்வது தெரியவந்துள்ளது.
குறிப்பாக 18-64 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மன நலன் சார்ந்த சிக்கல்களான மன அழுத்தம் பதற்றம் போன்றவை அதிகரித்துள்ளன. இது ஆல்பா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் என உருமாறிய தொற்றுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறதா என்ற விரிவான ஆய்வை லேன்செட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
மேலும், இந்த பிரச்னையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வழிகாட்டுதல்களையும் லேன்செட் நிறுவனம் தயாரிக்கும் முயற்சியில் லேன்செட் இறங்கியுள்ளது.
கோவிட் பாதித்தவர்களில் 10-20 சதவீதம் பேர் நீண்ட கால கோவிட் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.