மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை கனவு சிதறியது ; ஸ்பெயின் வரலாற்று சாதனை
2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்–நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், சுமார் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இரு அணிகளும் ஆரம்பம் முதல் கடுமையான போட்டியை வெளிப்படுத்தின.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

போட்டியின் 93ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்று வெளியேறியதால், அந்த அணி 10 வீரர்களுடன் போட்டியைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த எண்ணிக்கைக் குறைபாட்டைச் சாதகமாக பயன்படுத்திய ஸ்பெயின், கூடுதல் நேரத்தின் 106ஆவது நிமிடத்தில் நிக்கோ வில்லியம்ஸின் தலையால் தள்ளப்பட்ட பந்தை ஃபெர்ரான் டோரஸ் வலுவான ஷாட்டாக கோலாக மாற்றி வெற்றியை உறுதி செய்தார்.
2010ஆம் ஆண்டு நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் உலகக் கோப்பையை வென்றிருந்த ஸ்பெயின், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகளுக்கு இணையாக இரண்டு உலகக் கோப்பை பட்டங்களை வென்ற நாடுகளின் வரிசையில் ஸ்பெயின் இணைந்துள்ளது.
இறுதிப் போட்டி முழுவதும் ஸ்பெயின் அணி பந்தின் கட்டுப்பாட்டை அதிக நேரம் தக்கவைத்ததுடன், தொடர்ச்சியான தாக்குதல்களால் அர்ஜென்டினாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
எனினும், அர்ஜென்டினா கோல்காப்பாளர் எமிலியானோ "டிபு" மார்டினஸ் அபாரமான மீட்புகளை நிகழ்த்தி அணியை நீண்ட நேரம் போட்டியில் நிலைநிறுத்தினார்.
நடப்பு சாம்பியனாக களமிறங்கிய அர்ஜென்டினா, லியோனல் மெஸ்ஸியை மையமாகக் கொண்டு தாக்குதல்களை முன்னெடுக்க முயன்ற போதிலும், ஸ்பெயின் வீரர்களின் ஒழுங்கமைந்த தற்காப்பால் அவரது தாக்கம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

போட்டி முழுவதும் அர்ஜென்டினாவால் இலக்கை நோக்கிய குறிப்பிடத்தக்க தாக்குதல்களை உருவாக்க முடியாமல் போனது.
மறுபுறம், தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுவென்டேவின் கீழ் ஸ்பெயின் அணி முழுத் தொடரிலும் ஒருங்கிணைந்த அணியாக விளையாடி, தனிநபர் திறமையை விட குழு ஆட்டத்தின் வலிமையால் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மாற்று வீரராக களமிறங்கிய ஃபெர்ரான் டோரஸின் வெற்றிக்கோல், ஸ்பெயின் கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.