செனகல் கடற்பரப்பில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து ; 21 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் மாத்திரம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செனகல் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை தற்காலிகமானது எனவும், தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
டக்கர் நகருக்கும் செயிண்ட்-லூயிஸ் நகருக்கும் இடைப்பட்ட கெபெமர் மாகாணத்தின் லூம்பூல் மணல் குன்றுகளுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இடம்பெற்றதா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஸ்பெயினின் கேனரி தீவுகளைச் சென்றடைய முயற்சிக்கும் புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் ஆபத்தான கடற்பயணத்தின் தொடர்ச்சியாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், ஸ்பெயினை நோக்கிப் பயணித்த மற்றுமொரு படகில் இருந்த 142 புலம்பெயர்ந்தோரை செனகல் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடைமறித்துள்ளனர். அவர்களில் 23 பெண்கள், இரண்டு பச்சிளம் குழந்தைகள் மற்றும் இரண்டு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
அவர்கள் செனகல், காம்பியா, கினியா-பிசாவ், கினியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதக் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதற்கும், அண்டை நாடுகளுடன் இணைந்து சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என செனகல் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியரோவில் புலம்பெயர்ந்தோர் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாத ஆரம்பம் முதல் சுமார் 30 படகுகள் மூலம் 3,300-க்கும் மேற்பட்டோர் அத்தீவை வந்தடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர், வறுமை மற்றும் பாதுகாப்பற்ற சூழல்களிலிருந்து தப்பித்து ஐரோப்பாவைச் சென்றடைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் இந்த ஆபத்தான அட்லாண்டிக் கடற்பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர்.