ஓமன் அருகே சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்
ஓமன் அருகே அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில், கப்பலின் எஞ்சின் அறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமனின் அஷ் ஷிஷான் நகரில் இருந்து சுமார் 9 நாட்டிகல் மைல் தொலைவில், ஹர்முஸ் ஜலசந்திக்கு அருகே கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பலை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது கப்பலின் எஞ்சின் அறை முழுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் ஓமன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது யார் என்பது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, ஈரான் இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், ஹர்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் அறிவித்திருந்தது.
மேலும், அனுமதியின்றி ஹர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் பகுதிகளில் பயணிக்கும் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓமன் அருகே இடம்பெற்றுள்ள புதிய ஏவுகணைத் தாக்குதல் சம்பவம், மத்திய கிழக்கு கடற்பரப்பில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.