போலி தடுப்பூசி அட்டைகள்... 1.5 மில்லியன் டொலர் சம்பாதித்த செவிலியர்
அமெரிக்காவின் நியூயார்க்கில் போலி கொரோனா தடுப்பூசி அட்டைகளை விநியோகித்து செவிலியர்கள் இருவர் 1.5 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் Amityville பகுதியில் செயல்பட்டு வந்த சுகாதார மையத்தின் உரிமையாளரான Julie DeVuono மற்றும் அவரது ஊழியரான Marissa Urraro ஆகிய இருவருமே போலி தடுப்பூசி அட்டைகளை விநியோகித்து வந்துள்ளனர்.
செவிலியர்களான இருவர் மீதும் தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. மருத்துவத்துறையின் நன்கு அனுபவம் பெற்ற செவிலியர்கள் என்பதால், பொதுமக்கள் வெளிவரும் அனைத்து செய்திகளையும் நம்ப வேண்டாம் என அவர்கள் தரப்பு சட்டத்தரணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தற்போது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளால், அவர்கள் இதுவரை அளித்துள்ள சேவைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செவிலியர்கள் இருவரும் தடுப்பூசி மறுப்பாளர்களுக்கு போலி தடுப்பூசி அட்டைகளை வழங்கி வந்துள்ளனர். சிறார்களுக்கு தலா 85 டொலரும் பெரியவர்களுக்கு தலா 220 டொலரும் கட்டணமாக வசூலித்துள்ளனர்.
இதில் Julie DeVuono செவிலியர் பயிற்சி பெற்றுவருபவர் எனவும், Marissa Urraro உரிமம் பெற்ற செவிலியர் எனவும் தெரிய வந்துள்ளது.
சட்ட அமலாக்க அதிகாரிகள் DeVuono வின் வீட்டைச் சோதனை செய்துள்ள நிலையில், நவம்பர் 2021ல் தொடங்கிய இந்தத் திட்டத்தில் இருந்து சுமார் $900,000 ரொக்கம் மற்றும் $1.5 மில்லியனுக்கும் அதிகமான தொகையை சம்பாதித்துள்ளதாக காட்டும் லெட்ஜரையும் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர்.