உயரும் ஓமிக்ரான் தொற்றாளர் எண்ணிக்கை... பிரித்தானியாவில் ஒரே நாளில் 93,000 பேர் பாதிப்பு
பிரித்தானியாவில் புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஒரே நாளில் 93,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உலகின் 89 நாடுகளில் பரவியுள்ள ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பில் பல நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. திங்கட்கிழமை முதல் நெதர்லாந்து அரசு ஊரடங்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.
ஓமிக்ரான் பரவலை அடுத்து உலகின் முதல் நாடாக, இஸ்ரேல் தமது நாட்டின் தேசிய எல்லைகளை மூடியது. அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் பல பயணக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் ஒரே நாளில் 93,045 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, கடந்த மூன்று நாட்களாகவே பிரித்தானியாவில் பாதிப்பு எண்ணிக்கை 93,000 கடந்துள்ளதாகவே தெரியவந்துள்ளது. இதனிடையே, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் லண்டனை பொறுத்தமட்டில் கொரோனா தொற்றாளர்களில் 80 சதவீதம் பேர்கள் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.