உறுதி அளியுங்கள்... கனடாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் அரசுக்கு முன்வைத்த கோரிக்கை
கனடாவில் ஜமைக்கா நாட்டவர் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக உரிமைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு கனேடிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த வாரம் தெற்கு ஒன்ராறியோவில் உள்ள பண்ணை ஒன்றில் பணிபுரியும் ஜமைக்கா நாட்டு தொழிலாளி ஒருவர் பணியின் போது பரிதாபமாக மரணமடைந்தார். ஒன்ராறியோவின் தொழிலாளர் அமைச்சகம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர்.
மேலும் நார்ட்ஃபோக் கவுண்டியில் உள்ள ஒரு பண்ணையில் குறித்த மரணம் ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. பண்ணையில் தொழில் இயந்திரம் ஒன்றை இயக்கும் போது படுகாயமடைந்தவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர் 57 வயதான Garvin Yapp என அடையாளம் கண்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஒன்ராறியோவின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் அமைப்பு ஒன்று ஜமைக்கா தொழிலாளர் அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், நிறவெறி மற்றும் சுரண்டல்களை எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் உணவுகளை எலி உண்ணும் அளவுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், ஈரமான உடைகளுடன் பணிக்கு செல்லும் அவலமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பொதுவாக கனடாவில் பணிபுரியும் போது அவர்களுக்கு தற்காலிக குடியேற்ற அனுமதி மட்டுமே அளிக்கப்படுகிறது. இதனால் தங்களுக்கான அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
கனேடிய மக்களின் பசி போக்க பாடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது எனவும், இந்த நிலையில் இருந்து அவர்களை மீட்க உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.