கனடாவில் மருத்துவமனைகளில் இடமில்லை; வெளிநாட்டில் கனடியருக்கு ஏற்பட்ட நெருக்கடி
கனடாவில் மருத்துவமனை வசதியில்லா காரணத்தினால், ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் கொஸ்டாரிக்காவில் நிர்க்கதியாகியுள்ளார்.
கொஸ்டாரிக்காவில் திடீரென உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.
ஒன்றாரியோவின் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனை படுக்கைகளுக்கு (hospital beds) பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவின் கலாபோகி பகுதியைச் சேர்ந்த கிரான்ட் றைஸ் என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
69 வயதான றைஸ் விடுமுறைக்காக கொஸ்டாரிக்கா சென்றிருந்தார். எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி அங்கிருந்து திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார்.
எனினும் அவரது உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால் அவசரமாக நாடு திரும்ப வேண்டியிருந்தது.
எனினும், ஒன்றாரியோவின் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதனால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் மேலதிக சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் றைஸ் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்.
கொஸ்டாரிக்காவில் போதியளவு மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தினால் அவரை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிட்டதாக அவரது மகள் எமா றைஸ் தெரிவித்துள்ளார்.
தமது தந்தை ஜீபிஎஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
காப்புறுதி, விமான வசதி என்பன இருந்தாலும் மருத்துவ வசதியின்றி தமது தந்தை வேறும் நாடொன்றில் நிர்க்கதியாகியுள்ளதாக எமா தெரிவித்துள்ளார்.