டிரம்பின் வரி எச்சரிக்கைக்கு ஒன்டாரியோ முதல்வர் காரசாரமான பதிலடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீது அடுத்த ஆண்டு முதல் 50 சதவீதம் வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதற்கு ஒன்டாரியோ மாகாண முதல்வர் டோக் ஃபோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபோர்ட், டிரம்பின் இந்த அச்சுறுத்தலைச் சற்றும் பொருட்படுத்தப்போவதில்லை என்று மிகக் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்தார்.
டிரம்பின் பதிவுக்குப் பிறகு பேசிய ஃபோர்ட், கனடா அனைத்து வளங்களையும் பயன்படுத்தி டிரம்பை எதிர்த்துப் போராடும் என்றார்.

அவர் ஒரு அடாவடிக்காரர், சர்வாதிகாரி மற்றும் தொழில் நஷ்டங்களின் ராஜா. அவருக்கு நான் பதிலளித்து அவரது வலையில் விழப்போவதில்லை. அவர் ஒரு தோல்வியாளர்" என்று ஃபோர்ட் சாடினார்.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், பொட்டாஷ், யுரேனியம் மற்றும் அரிதான உலோகங்களின் விலையை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும் அல்லது அவற்றை நிறுத்தி அமெரிக்காவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித்திடம் வலியுறுத்தப்போவதாக ஃபோர்ட் கூறினார்.
அமெரிக்காவிற்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் மீது ஏற்றுமதி வரியை உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாகாண முதல்வர்களும் இதில் ஒன்றாக இணைய வேண்டும் என போர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.