உக்ரைனில் இருந்து மும்பைக்கு வருகை தந்த 392 இந்தியர்கள்!
உக்ரைனிலிருந்து செல்லப் பிராணிகளை தன்னுடன் அழைத்து வர இந்திய தூதரகம் உதவி செய்ததாக டெல்லி வந்த நபரொருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, தாய்நாடு அழைத்து வரும் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
உக்ரைனின் வான்வெளி பெப்ரவரி 24ஆம் திகதி முதல் மூடப்பட்டதில் இருந்து ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்த நிலையில், ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து 182 இந்தியர்களுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு விமானம் நள்ளிரவு மும்பையில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் மத்திய மந்திரி கபில் பாட்டீல் இந்தியர்களை வரவேற்றார்.
பின்னர் அவர்களுடன் உரையாடிய பாட்டீல், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் அழைத்து வரும் வரை மத்திய அரசின் பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் 210 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படை விமானம் ருமேனியாவின் புகாரெஸ் நகரில் இருந்து டெல்லிக்கு அருகிலுள்ள ஹிந்தன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இந்த விமானத்தில் பயணித்த இந்தியர் ஒருவர், உக்ரைனில் இருந்து தமது செல்ல பிராணிகளுக்கான பூனைகளை அழைத்து வந்துள்ளார்.
இதற்கு இந்திய தூதரகம் உதவி செய்ததாகவும், என் பூனைகள் எனக்கு உயிர் என்றும், நான் அவற்றை உக்ரைனில் விட்டு வந்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் இந்தியர்கள் அனைவரும் தங்கள் செல்லப்பிராணிகளை அழைத்து வருமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.