குப்பைகளால் நிரம்பும் முக்கிய தலைநகரம்: நோய்த்தொற்றின் பீதியில் மக்கள்
ஸ்கொட்லாந்த் தலைநகரின் தெருக்களில் குவியும் குப்பைகளால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதுடன், தற்போது நோய்த்தொற்றின் பீதியில் வாழ்வதாக கூறியுள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கின் தெருக்களில் சமீப நாட்களாக மலைபோல குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. குவியும் குப்பைகளாலும், அதில் இருந்து எழும் துர்நாற்றம் காரணமாகவும், பல ஆயிரம் மக்கள் திரளும் முக்கிய விழாவானது தடைப்படும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
குப்பைகளால் தெருக்கள் முழுவதும் தற்போது எலித்தொல்லையும் அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பீதியில் மக்கள் உள்ளனர். ஸ்காட்டிஷ் தொழிலாளர் கட்சியினரால் நடத்தப்படும் எடின்பர்க் நகர சபைக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் இடையே உள்ளூர் அரசாங்க ஊதியம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊதியம் தொடர்பான விவாதத்தில் இருந்து கடந்த வாரம் ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதனிடையே, கிளாஸ்கோ, டண்டீ மற்றும் அபெர்டீன் உட்பட 13 மற்ற உள்ளூர் நிர்வாகத்தின் கீழ் உள்ள கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களும் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்காட்லாந்து அரசாங்கம் தலையிட்டு ஊதியப் பிரச்சினையைத் தீர்க்க அதிக பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.