பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வு
பாகிஸ்தானில் ஷியா பிரிவு மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் ஷியா பிரிவினருக்கான மசூதி ஒன்று உள்ளது.
அந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை (04-03-2022) தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 45 பேர் உடல் சிதறி பலியாகினர். 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. 194 பேர் காயமடைந்து உள்ளனர். 50 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டு பெஷாவர் நகரில் மக்கள் அதிகம் கூட கூடிய சந்தையில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்பு பெஷாவரில் ஏற்பட்டு உள்ள பெரிய தாக்குதல் இது என கூறப்படுகிறது.