தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவருக்கு நேர்ந்த நிலை!
சிங்கப்பூரில் தமிழர் உட்பட இருவரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவருக்கு சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் மீது மோதி, வெளிநாட்டு ஊழியர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமான லொரி ஓட்டுநருக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி ஜாலான் பஹாரை (Jalan Bahar) நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் (PIE) நிகழ்ந்தது.
இந்தியாவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி பிரபு என்ற நபர் 17 ஊழியர்கள் இருந்த லொரியை ஓட்டிக்கொண்டிருந்தார். ஊழியர்கள் சுகுணன் சுதீஷ்மனும் டோஃபஸல் ஹொசைனும் (Tofazzal Hossain) லொரி ஓட்டுநர் அமரும் இடத்துக்குப் பின்புறம் மிக அருகில் இருந்தனர்.
விரைவுச்சாலையில் தடம் மாற முற்பட்டபோது குப்பைகளைத் திரட்டும் கனரக வாகனம் ஒன்று அருகில் நிறுத்தப்பட்டிருந்ததைப் பிரபு கவனிக்கத் தவறினார். சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் ஒரு பகுதி, பிரபு ஓட்டிய லொரி சென்ற தடத்தில் இருந்தது.
லொரி, கனரக வாகனத்தின்மீது மோதியதை அவரால் தவிர்க்கமுடியவில்லை. ஊழியர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 15 பயணிகள் காயமுற்றனர். பிரபுவுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் 8 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டவும் வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கவனமின்றி வாகனம் ஓட்டி மற்றவர்களின் மரணத்தை விளைவித்ததற்கு 10,000 வெள்ளி வரை அபராதமோ 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.