முதலையால் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்: வெளிவரும் பகீர் பின்னணி
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் விபத்துக்குள்ளான பயணிகள் விமானமானது கடத்தப்பட்ட முதலையால் ஏற்பட்டது என்ற தகவலை தற்போது அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கோர விபத்தில் இரு விமானிகள் உட்பட 20 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 2010 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் இருந்து குறித்த விமானமானது புறப்பட்டது.
ஆனால் குடியிருப்பு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், விமானிகள் உட்பட 20 பேர் பலியாகினர். சம்பவம் நடந்த போது, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றே அதிகாரிகள் கருதினர்.
விமானம் விபத்தில் சிக்கிய பின்னர் வெடிக்காததே அதற்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த விபத்திற்கு உண்மையான காரணம் முதலை என்பது விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு பயணி, முதலை ஒன்றை விற்கும் திட்டத்துடன் ஒரு டஃபில் பையில் விமானத்தில் கடத்திச் சென்றுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த முதலை பையில் இருந்து தப்பியதால், பயணிகள் பீதியில் விமானத்தின் ஒரு பக்கத்தில் குவிந்துள்ளனர்.
அதாவது, விமானப்பணிப் பெண் ஒருவர் பயத்தில் விமானியின் அறைக்குள் விரையவே, பயணிகளும் வலுக்கட்டாயமாக விமானியின் அறைக்குள் புகுந்துள்ளனர்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், தலை கீழாக தரையில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் முதலை உயிர் தப்பியுள்ளது.
ஆனால் அதிகாரிகள் வாள் கொண்டு முதலையை வெட்டி கொன்றுள்ளதாக கூறப்பட்டது.