ஸ்பெயினில் முன்கூட்டிய பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்
ஸ்பெயினில் வாக்களிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டு, முன்கூட்டிய பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டின் வீடமைப்புச் சட்டங்களில் கொண்டுவரத் திட்டமிடப்பட்ட திருத்தங்களை ஸ்பெயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து, சோசலிஸ்ட் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உரிய காலத்திற்கு எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே இந்தத் தேர்தலை அறிவித்திருந்தார்.
இந்தத் தேர்தலில் சான்செஸின் சோசலிஸ்ட் கட்சி ), பழமைவாத மக்கள் கட்சியிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

கருத்துக் கணிப்புகளின்படி, ஆல்பர்டோ நுனெஸ் பீஜோ தலைமையிலான மக்கள் கட்சியை விடப் பிரதமர் சான்செஸ் சற்றுப் பின்தங்கியிருப்பதாகக் கூறப்பட்டாலும், வெற்றி நிச்சயம் எனத் தமது ஆதரவாளர்களிடம் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 8:00 மணி வரை பல மில்லியன் ஸ்பெயின் மக்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்ய முடியும். வாக்குப்பதிவு முடிந்த சுமார் ஒரு மணித்தியாலத்தில் ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன், உத்தியோகபூர்வ முடிவுகள் திங்கட்கிழமை அதிகாலை வரை வெளியிடப்படும்.
மலிவு விலையில் வீடுகள் கிடைக்காமை இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மைப் பேசுபொருளாக இருந்ததுடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் குடியேற்றம் ஆகியவையும் முக்கிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.
2018 முதல் பதவியிலுள்ள சான்செஸ், காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமை மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விமர்சித்தமை மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற போதிலும், உள்நாட்டில் வீடமைப்பு நெருக்கடி, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் இரண்டு பாரிய ரயில் விபத்துக்கள் ஆகியவை அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
சான்செஸின் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றாலும் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியை அமைப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
மறுபுறம், பீஜோவின் மக்கள் கட்சி ஆட்சியமைக்க வேண்டுமாயின், சாண்டியாகோ அபாஸ்கல் தலைமையிலான தீவிர வலதுசாரி வோக்ஸ் (Vox) கட்சியின் ஆதரவு தேவைப்படும். ஏற்கனவே ஸ்பெயினின் நான்கு பிராந்தியங்களில் இணைந்து ஆட்சி செய்யும் மக்கள் கட்சியும் வோக்ஸ் கட்சியும், தேசிய மட்டத்தில் ஆட்சியமைத்தால் அது ஐரோப்பாவின் அதிகாரச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
நலத்திட்டங்களில் ஸ்பெயின் குடிமக்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பொருளாதாரத்திற்குப் பங்களிக்காத வெளிநாட்டவர்களைத் திருப்பி அனுப்புதல் போன்ற கொள்கைகளை வோக்ஸ் கட்சி ஆதரிக்கிறது.
சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் ஆட்சிக்காலத்தை இது நினைவூட்டுவதாக விமர்சகர்கள் கூறினாலும், வோக்ஸ் கட்சி அதனை மறுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், பாரம்பரியப்படி சனிக்கிழமை பிரச்சாரத் தடை நாளாக அனுசரிக்கப்பட்டது.