வாக்னர் கூலிப்படைத் தலைவரை சந்தித்த அதிபர் புடின்?
ரஷ்யாவில் ஆயுத கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு, அதற்கு காரணமான வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் அதிபர் புடினை சந்தித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக அந்நாட்டை சேர்ந்த ராணுவ ஒப்பந்த நிறுவனமான வாக்னர் கூலிப்படை போரிட்டு வருகிறது.
சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் கிளர்ச்சி
இப்படையின் தளபதி எவ்ஜெனி பிரிகோஜினுக்கும், ரஷ்யாவின் உயர்மட்ட ராணவ அதிகாரிகளுடன் நீண்டகாலமாக மோதல் இருந்து வந்த நிலையில் , கடந்த ஜூன் 24ம் திகதி பிரிகோஜின் , ரஷ்ய எல்லை நகரை கைப்பற்றி தலைநகர் மாஸ்கோ நோக்கி முன்னேறினார்.
இந்த ஆயுத கிளர்ச்சி ரஷ்யாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிகோஜின் முதுகில் குத்தும் துரோகி, தேச துரோகி என ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக விமர்சித்தார்.
எனினும் , பிரிகோஜினை பெலாரசுக்கு நாடு கடத்துவதற்கான ஒப்பந்தம் முடிவானதால், மாஸ்கோ நோக்கிய ராணுவ பேரணி பாதியிலேயே கைவிடப்பட்டது.
3 மணி நேரம் புடினுடன் சந்திப்பு
இந்த கிளிர்ச்சிக்குப் பிறகு கடந்த 29ம் திகதி பிரிகோஜின் தனது படையின் முக்கிய வீரர்கள் சுமார் 35 பேருடன் அதிபர் புடினை சந்தித்து பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு 3 மணி நேரம் நடந்ததாகவும், இதில் உக்ரைன் போர்களத்தில் வாக்னர் படையின் நடவடிக்கைகள், ஆயுத கிளர்ச்சி நிகழ்வுகள் குறித்து அதிபர் புடின் மதிப்பீடு செய்ததாக செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.
அதேவேளை வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சி விவகாரம் புடினை பலவீனமானவராக வெளிஉலகிற்கு காட்டிய நிலையில், கூலிப்படையின் தலைவரை புடி சந்தித்ததாக ரஷ்ய அரசு வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.