லண்டன் முதல் மெக்ஸிகோ சிட்டி வரை... ஜெலென்ஸ்கியின் அழைப்பால் திரண்ட மக்கள்
உக்ரைனில் புடினின் மிருகத்தனமான படையெடுப்பிற்கு எதிராக, ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உலகின் பல்வேறு நகரங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஐந்தாவது வாரத்தில் எட்டியுள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் முக்கியமான 15 தளபதிகளையும் இழந்தும் ரஷ்யா படையெடுப்பை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு காணொளி ஒன்றை வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, சுதந்திரத்திற்கு ஆதரவாக, உக்ரைனுக்கு ஆதரவாக, எதிர்காலத்திற்கு ஆதரவாக உக்ரைனின் அடையாளங்களுடன் தெருவில் இறங்கி ஆதரவு தாருங்கள் என உலக மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மட்டுமின்றி, மார்ச் 24 முதல் உங்கள் ஆதரவை உக்ரைனுக்கு தெரிவியுங்கள், இந்த நாசத்தை ஏற்படுத்தும் போர் வேண்டாம் என்பதை ரஷ்யாவுக்கு நினைவுபடுத்துங்கள் என குறிப்பிட்டார்.
ஜெலென்ஸ்கியின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், வியாழக்கிழமை உலகின் முக்கிய நகரங்களில் மக்கள் உக்ரைன் அடையாளங்களுடன் திரண்டுள்ளனர்.
லண்டனிலிருந்து சோபியா வரை, ஹேக் முதல் ஈக்வடார் வரை, கிராகோவிலிருந்து மெக்சிகோ சிட்டி வரை திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், உக்ரைன் கொடியுடன் தெருக்களில் இறங்கி போருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
பிரித்தானியாவில் லண்டன் நகரம், அயர்லாந்தின் டப்லின் நகரம் என நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பதாகைகளுடன் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராகவும் போருக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, ஐரோப்பாவின் பிரதான நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி பேரணியில் ஈடுபட்டனர். உக்ரைனில் இருந்து தப்பிவந்த 60,000 அகதிகளில் சிலர் பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், ஈக்வடார், மெக்சிகோ சிட்டி, ஹாங்காங், தென் கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்துள்ளன.