பிரிட்டன் ராணியாருக்காக குவிந்த அஞ்சலி கடிதங்களால் திணறிப்போன அரண்மனை
பிரிட்டன் ராணியார் காலமான பின்னர், அவருக்காக பொதுமக்கள் அனுப்பிய அஞ்சலி கடிதங்களால் பக்கிங்ஹாம் அரண்மனை திணறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 8ம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் மாளிகையில் வைத்து பிரிட்டன் ராணியார் இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக காலமானார்.
இந்த நிலையில், செப்டம்பர் 19ம் திகதி அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் அருகாமையில் உள்ள சிற்றாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ராணியார் காலமான பின்னர் பொதுமக்கள் பலர் கண்ணீர் அஞ்சலி கடிதங்களை பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பியுள்ளனர். ஒரே நாள் மட்டும் 6,500 கடிதங்கள் கிடைக்கப்பெற்றதாகவும், மொத்தமாக 50,000 கடிதங்கள் குவிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து கடிதங்களும் வாசிக்கப்பட்டு வருவதாகவும், பெரும்பாலான கடிதங்கள் மன்னர் சார்ல்ஸ் பெயருக்கு அனுப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராணியாரின் மறைவுக்கு முன்னர், ஒரு வாரத்தில் சுமார் 1,000 கடிதங்கள் பொதுமக்களிடம் இருந்து அரண்மனைக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளது.
இந்த கடிதங்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டு, உரிய பதிலும் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.