போருக்கு மத்தியிலும் அரங்கேறும் நிறவெறி அராஜகம்!
ரஷ்யா- உகரைன் இடையேயான போர் தீவிரமடைந்துவரும் நிலையில், உக்ரைனிலிருந்து தப்பிச் செல்பவர்களிலும் ‘வெள்ளையர்களிற்கே முதலிடம்’ என்ற நிறவெறிக் கொள்கையை உக்ரைன் இராணுவம் கடைப்பிடிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தப்பிச்செல்லும் போது நிறவெறிக்கு உள்ளான பல கருப்பின மாணவர்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி மொராக்கோவை சேர்ந்த அயூப், கடந்த 6 வருடங்களாக உக்ரைனில் மருந்தக கற்கைநெறியை கற்று வருகின்றார். இன்னும் 3 மாதங்களில் அவரது கற்கை பூர்த்தியாகவிருந்த அதற்குள் ரஷ்யப் படையெடுப்பு நிகழ்ந்தது.
உக்ரைனின் வடக்கிலுள்ள கார்கிவ் நகரில் அயூப் தங்கியிருந்தார். சுமார் 14 இலட்சம் மக்கள் வசிக்கும் அந்த நகரம், ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ளதனால் ரஷ்ய மக்களுடன் இந்த நகர மக்களிற்கு நெருங்கிய தொடர்புண்டு. இதன் காரணமாக இரு நாட்டு ம்மக்களுக்கும் இடையில் வர்த்தக, திருமண உறவுகளும் உள்ளதுடன் அங்கு ரஷ்ய மொழி பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு தங்கியிருந்த அயூப் ரஷ்ய மொழி பேச கற்றுக்கொண்டிருந்தார். ரஷ்ய தாக்குதல் தொடங்கிய முதல் நாட்களில், விரைவில் தாக்குதல் நிறுத்தப்பட்டு விடும், அதுவரை காத்திருக்கலாமென அவர் நம்பினார்.
எனினும், அதற்கான சாத்தியமற்று போயுள்ளதால் , தனது நண்பர்கள் குழுவுடன் போலந்து எல்லை வழியாக அவர் தப்பிச் செல்ல முயன்றார். போர் உக்கிரமடைந்து வருவதால் போலந்திற்குள் நுழைய மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள்.
இந்த நிலையில் போலந்து எல்லையில் இருந்து 80 கிலோமீட்டர்கள் (50 மைல்) தொலைவில் உள்ள லிவிவ் நகரில், அயூப்பும் அவரது நண்பர்களான வெளிநாட்டு மாணவர்கள் குழுவும் (அவர்கள் யாரும் வெள்ளையர் அல்ல) உக்ரைனிய படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
“உக்ரைனியர்கள் முதலில் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், எனவே வெள்ளையர்களுக்கு முன்னுரிமை கிடைத்தது. டாக்ஸி டிரைவர்களும் எங்களிடம் இனவெறியை காண்பித்தனர். ஆனால் போரில் கூட சந்தர்ப்பவாதிகள் எப்போதும் இருப்பார்கள் என்று நினைத்தேன்.
போலந்து எல்லையை நெருங்கும் இடத்தில் உள்ள ‘சோதனைச் சாவடி’களில் ஒன்றை நான் அடைந்த போது, நான் பின்னுக்குத் தள்ளப்பட்டு காத்திருக்கும்படி சொல்லப்பட்டதாக அவர் கவலையுடன் கூறினார். அங்கு காத்திருப்பதில் பலனில்லையென தெரிந்ததும், போலந்தை விட்டுவிட்டு ஹங்கேரிக்குச் செல்ல அவர் முடிவு செய்த அவர் நேற்று புதன்கிழமை ஹங்கேரி வந்ந்தடைததாக கூறப்படுகின்றது.
“நான் ரஷ்ய மொழியில் காவலர்களிடம் பேசியபோது, நான் உக்ரைனிய மொழியில் பேச வேண்டும் என என்னிடம் சொன்னார்கள், நான் யாருடைய பக்கம் இருக்கிறேன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். அது மிகவும் எனக்கும் வருத்தமாக இருந்தது என்றார் அயூப்.
உக்ரைன் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆண்டுக்கு 4,000 முதல் 5,000 டொலர்கள் வரையிலான ஒப்பீட்டளவில் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் உயர்தரக் கல்வியின் காரணமாக சர்வதேச மாணவர்களை உக்ரைன் பல்கலைகழகங்கள் ஈர்த்துள்ளன. அந்தவகையில் இந்தியா, நைஜீரியா மற்றும் மொராக்கோ போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கார்கிவை ஒரு துடிப்பான பல்கலைக்கழக நகரமாக மாற்ற உதவியுள்ளனர்.
அவர்களின் கட்டணம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களித்துள்ளது. இந்தையடுத்து பலர் உக்ரைனில் பட்டம் பெற்ற பிறகு தங்கி அந்நாட்டின் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதும், இந்த பல்கலைகழகங்கள் மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதோடு படையெடுப்பு நாளான பெப்ரவரி 24 ஆம் திகதி, கற்கைநெறி இணையவழியாக மேற்கொள்ளப்படுமென பல பல்கலைகழகங்கள், மாணவர்களிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளன. அதன் பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதே பல்கலைக்கழங்கள், பெப்ரவரி 28 முதல் மார்ச் 12 வரை “விடுமுறை” அறிவிக்கும் மின்னஞ்சலை அனுப்பின.
இது குறித்து வடக்கு நைஜீரியாவைச் சேர்ந்த 19 வயது மாணவி டெபோரா கூறுகையில், “நாங்கள் வெளியேற யாரும் உதவவில்லை அல்லது எதையும் ஒருங்கிணைக்கவில்லை, நாங்கள் தனியாக இருந்தோம். எனது நண்பர்கள் போலந்து எல்லைக்குச் சென்று உக்ரைனிய படையினரால் மோசமாக நடத்தப்பட்டனர். என்னைப் போன்ற கருப்பின மக்கள் மட்டுமல்ல வெள்ளையாக இல்லாத எவரையும் அவர்கள் அப்படித்தான் நடத்தினார்கள் என கவலை வெளியிட்டார்.
அதேவேளை இந்த குற்றச்சாட்டுக்கள் வலுவானதையடுத்து, உக்ரைனிய வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டதுடன், எல்லைப்பாதுகாப்பு படையினரின் நிறவெறிப் பாரபட்சம் பற்றிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
அத்துடன் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியது. டெபோரா மற்றும் அவரது சகோதரி அலியா (19) ஆகியோர் ஊடகங்களிடம் கருத்து கூறுகையில்,
“இந்த நாடு எனக்கு நிறைய கொடுத்துள்ளது. உக்ரைன் மக்கள் இந்த போருக்கு தகுதியானவர்கள் அல்ல, எல்லோரையும் போல, இது ஏன் நடந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.
மேலும் இந்த அழகிய நகரங்கள் ஷெல் தாக்குதலுக்கு உள்ளான படங்களைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது. ஆனால் எம்மால் மறக்க முடியாத ஒரு பக்கத்தை பார்த்திருக்கிறோம் என்றும் அவர் கவலை வெளியிட்டார்.