அவுஸ்திரேலியாவின் உல்லாடுல்லா நகரைத் தாக்கிய அரிய சூறாவளி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குத் தெற்கே சுமார் 226 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள 'உல்லாடுல்லா' கரையோர நகரத்தை அரிதான சூறாவளிச் சுழற்காற்று ஒன்று சனிக்கிழமை(03) நண்பகலில் திடீரெனத் தாக்கியுள்ளது.
கடும் மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் வீடுகள், உணவகங்களின் வெளிப்புற மரச்சாமான்கள், உணவகப் பாத்திரங்கள் தூக்கி வீசப்பட்டுச் சேதமடைந்துள்ளன.

"கண் சிமிட்டும் நேரத்திற்குள் இந்த சுழற்காற்று நகரைத் தாக்கியது. உணவகத்திலிருந்த கண்ணாடிகள், தட்டுகள் அனைத்தும் உடைந்து பெரும் அழிவு ஏற்பட்டது" என உள்ளூர் உணவக உரிமையாளர் ஜூலியஸ் மச்சாடோ தெரிவித்துள்ளார்.
மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் விநியோகம் தடைப்பட்டதுடன், அவசர உதவிகளைக் கோரி அவசர உதவிப் பிரிவினருக்குப் பல அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
அவுஸ்திரேலியாவில் ஆண்டுக்குச் சுமார் 50 சுழற்காற்றுகள் பதிவானாலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இவ்வாறான 'டொர்னாடோ' தாக்குவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு என ஆஸ்திரேலிய வளிமண்டலவியல் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவின் பிரதான சிட்னி நகரிலும் சனிக்கிழமை மாலை பெய்த கடும் மழையால் வீதிகள் ஆறுகளாகக் காட்சியளித்துள்ளன.