கனடாவில் கொடூரம்: வீதியில் நடந்து சென்ற வளர்ப்பு நாய் சுட்டுக்கொலை
கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தில் உள்ள நோர்த் பெட்டில்ஃபோர்ட் பகுதியில், நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த நாய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஒரு பெண் உட்பட மூன்று பேர் மீது பொலிஸார் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 26, வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் 8வது அவென்யூ நோர்த் பகுதியில் நபர் ஒருவர் தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பலருடன் வந்த ஒரு ட்ரக் வண்டி அவர் அருகே நின்றது. அதிலிருந்த நபர்கள் மிரட்டல் விடுத்ததுடன், திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக நாயின் உரிமையாளருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூடு நடத்திய பின் அந்த கும்பல் வாகனத்தில் தப்பியோடியது. சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்தவுடன் விசாரணையில் இறங்கிய பொலிஸ் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய அந்த ட்ரக் வண்டி 110வது வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
அங்கிருந்த வீட்டிலிருந்து வெளியே வந்த மூன்று ஆண்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். அதேவேளை, வீட்டிலிருந்து தப்பியோட முயன்ற பெண் ஒருவரும் விரட்டிப் பிடிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற அனுமதியுடன் அந்த வீட்டைச் சோதனையிட்ட காவல்துறையினர், அங்கிருந்த இரண்டு துப்பாக்கிகளைக் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர் எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.