உக்ரேனிய சாதனை நாயகன் விடுத்த வேண்டுகோள்
யுத்தம் முடிவுக்கு வரவேண்டும் எனவும் அமைதியும் மனிதநேயமும் நிலைநாட்டப்படவேண்டும் எனவும் உக்ரைனின் முன்னாள் கோலூன்றிப் பாய்தல் உலக சாதனை நாயகன் சேர்ஜி பப்கா (Sergey Bubka) கோரிக்கை விடுத்துள்ளார்.
தமது நாட்டின்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளபோதிலும் 'உக்ரைன் வெற்றிபெறும்' என தனது டுவிட்டர் பக்கத்தில் சேர்ஜி பப்கா (Sergey Bubka) குறிப்பிட்டுள்ளார்.
'எனது தேசத்தை இதயபூர்வமாக நேசிக்கின்றேன்' எனவும் சோல் 1988 ஒலிம்பிக் கோலூன்றி பாய்தல் சம்பியனும், யுக்ரெய்னின் தேசிய ஒலிம்பிக் குழு தலைவருமான சேர்ஜி பப்கா (Sergey Bubka) கூறியுள்ளார். பப்கா (Sergey Bubka) சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினராகவும் உலக மெய்வல்லுநர் நிறுவனத்தின் உதவித் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.
'உக்ரைன் கொடியின் கீழேயே நான் உலகின் அதி உயர் விருதுகளையும் கௌரவத்தையும் வென்றெடுத்தேன். இந்த தேசத்தை நான் மிகவும் நேசிக்கின்றேன். யுத்தத்தில் நாம் வெற்றிபெறுவோம்' என 58 வயதான சேர்ஜி பக்பா (Sergey Bubka) கூறியுள்ளார்.
கோலூன்றி பாய்தலில் 35 தடவைகள் உலக சாதனையைப் புதுப்பித்த பப்கா (Sergey Bubka) , 'எமது மனவலியை ஒலிம்பிக் குடும்பம் நன்கு உணர்கின்றது.
ஏனைய உக்ரைனியர்களைப் போன்று என்னாலும் உறங்க முடியவில்லை. எனது அனைத்து சர்வதேச தொடர்புகளையும் பயன்படுத்தி என்னிடம் உள்ள அனைத்து வழிகளிலும் நான் எமது நாட்டைப் பாதுகாக்க போராடுவேன் எனவும் பப்கா (Sergey Bubka) கூறியுள்ளார்.