தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷியா
உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது , 21-ம் நூற்றாண்டு இதுவரை கண்டிராக உக்கிர போராக மாறி வருகிறது.
ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கத்தான் நடவடிக்கை என கூறி ரஷியா களம் இறங்கினாலும், உக்ரைனின் முக்கிய நகரங்களை சின்னாபின்னமாக்கி பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது.
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகள் மட்டுமின்றி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் என தாக்குதலை விரிவுபடுத்தி, சர்வதேச கிரிமினல் கோர்ட்டின் வழக்கை எதிர்கொள்ளும் நிலையை ரஷியா தேடிக்கொண்டுள்ளது.
அதோடு உக்ரைனின் தலைநகர் அருகே நடந்த போரில் குழந்தைகளும் பலியானது நெஞ்சை நொறுக்குகிறது.
போரின் தீவிரத்தால் 15 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்தநிலையில், உக்ரைனில் மேலும் சில இடங்களில் ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்தி உள்ளது ரஷியா.
மனிதாபிமான அடிப்படையிலும் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறவும் ரஷ்யா போர் நிறுத்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.