கூகுளுக்கு தடை விதித்த ரஷ்யா! எதற்காக தெரியுமா?
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் பற்றி தவறான தகவல்களை பரப்புவதால் ‘கூகுளுக்கு’ தடை விதிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் சுமார் ஒரு மாத காலமாக தொடர்கிறது. உக்ரைன் மீதான தாக்குதலை தொடக்கிய பிறகு ரஷ்யா மீது உலகின் பல நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இருப்பினும், ரஷ்யா போரில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது.
இதனிடையே உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை அகற்றுவதற்கான, ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக நிறுவனங்கள் மீதான வழக்கில், சில நாட்களுக்கு முன் அந்நாட்டு நீதிமன்றம் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றுக்கு தடை விதித்தது. முன்னதாக போலி செய்திகள் தொடர்பாக டுவிட்டரும் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘கூகுள்' தேடுதளத்திற்கு தடை விதித்து அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் பற்றி தவறான தகவல்களை பரப்புவதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
‘கூகுள்' இந்த மாதத்தில் ரஷ்யாவில் இணையதளத்தில் எந்த விளம்பரமும் வெளியிடப்படாது என்று உறுதியளித்து இருந்தது. இருந்தபோதிலும் தவறான தகவல்களை பரப்ப உதவுவதாக தெரிவித்த ரஷ்ய ஒழுங்குமுறை ஆணையம் கூகுளுக்கு தடை விதித்துள்ளது.