உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் என்பது 5,000 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளாகும்.
நீண்ட தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ரஷ்யா அணு ஆயுதம் இல்லாத ஏவுகணையை கொண்டே தாக்குதல் நடத்தியுள்ளது.
அணு ஆயுதங்களை பயன்படுத்த அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புதல் அளித்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.