ரஷியா - உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை; போர் முடிவுக்கு வருமா !
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரானது 8-வது நாளாக நடைபெற்று வருகிற நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 8-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், போரை நிறுத்துவது தொடர்பாக தங்கள் நாடு மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
இதன்போது போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் இன்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதின் உதவியாளரும் ரஷ்யாவின் தூதுக்குழுவின் தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக போரை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.