பிரித்தானியா - நட்பு நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் குறித்து பிரித்தானியாவும், நட்பு நாடுகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரித்தானிய பாதுகாப்புப் படைத் தலைவர் அட்மிரல் சர் டோனி ராடாகின் தெரிவித்துள்ளார்.
“நாம் அமைதியாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும். எனவே, அதிபர் விளாடிமிர் புடினின் வினோதமான, அபத்தமான கருத்துக்கு நாம் அவசரப்பட்டுச் செயல்படக் கூடாது,” என்று அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசியபோது கூறினார்.
“பிரித்தானியா, உலகின் மிகப் பெரிய ராணுவக் கூட்டணியான நேட்டோவின் ஒரு பகுதியாகும். அணுஆயுத தடுப்பு சக்தியைக் கொண்டுள்ளது,” என்று அவர் வலியுறுத்தினார்.
“நாம் தயாராக உள்ளோம். அதிபர் புதினை எதிர்கொள்ளும் நம் திறனில் அபார நம்பிக்கையுடன் இருப்போம்,” என்று கூறியவரிடம், ரஷ்யா உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறதா என்பது குறித்த விவரங்கள் தெரியுமா எனக் கேட்டதற்கு, அதைப் பற்றி விவரமாகச் சொல்ல விரும்பாத அவர், அணுசக்தி அபாயம் சாத்தியமானால் “எச்சரிக்கை அறிகுறிகள்” இருக்கும் என்றார்.
பிரித்தானியா இன்னும் ரஷ்யாவுடன் தொடர்பு கொள்கிறதா என்று கேட்டபோது, அவர் மாஸ்கோவின் செயல்பாட்டு தலைமையகத்தோடு நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் அந்தத் தொடர்பு ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும், அவர் சமீபத்தில் ரஷ்ய ராணுவத் தளபதி வலேரி ஜெராசிமோவ் உடனான சந்திப்பைக் கோருவதற்கு அந்தத் தொடர்பைப் பயன்படுத்தியதாகவும், பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.