உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
உக்ரைனுக்கு ஏவுகணை வழங்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா வழங்கிய அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொண்டு ரஷ்யாவின் உள்பகுதிகளில் உக்ரைன் சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.
இது பதிலடியாக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து ரஷ்யா மக்களுக்கு உரையாற்றிய அதிபர் புடின் பேசியதாவது,
"ரஷ்யாவின் புதிய ஏவுகணையை தடுப்பதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் முடியாது. இது ஒலியின் வேகத்தைவிட 10 மடங்கு அதிவேகத்தில் செல்லும்.
ரஷ்யாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.
எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.
உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.