சில மணி நேரத்தில் உக்ரைனை கைப்பற்றுவோம்: சூளுரைத்த ரஷ்ய தளபதி பலி
உக்ரைன் நாட்டை சில மணி நேரத்தில் கைப்பற்றுவிடுவோம் என சூளுரைத்த ரஷ்ய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரில் இதுவரை 15 முக்கிய தளபதிகளை இழந்துள்ள ரஷ்ய துருப்புகளுக்கு இன்னொரு பேரிடியாக முக்கிய தளபதிகளில் ஒருவர் உக்ரைன் துருப்புகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
48 வயதான Yakov Rezantsev என்பவரே உக்ரைன் துருப்புகளால் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்ய தரப்பில் குறித்த தகவலை உறுதி செய்யவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் நான்காவது நாள் தமது வீரர்களிடம் பேசிய தளபதி Yakov Rezantsev, இன்னும் சில மணி நேரத்தில் தலைநகர் கீவ்வை கைப்பர்றுவோம் எனவும், போர் உடனே முடிவுக்கு வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த சில மணி நேரங்கள் இன்னமும் நீடித்து வருவதாக ரஷ்ய இராணுவ வீரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய தரப்பில் தொடர்ந்து முக்கிய தளபதிகள் பலியாகும் சூழலில், நிபுணர்கள் தரப்பு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும், இதற்கு பின்னணி கண்டிப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆனால், உக்ரைனில் திறமையான ஸ்னைப்பர்கள் படை இருப்பதாகவும், அவர்கள் முக்கிய ரஷ்ய தளபதிகளை குறிவைத்து பின்னடைவை ஏற்படுத்தி வருவதாகவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கின்றனர்.