உக்ரைனின் மற்றொரு துறைமுகத்தை கைப்பற்ற விரைந்த ரஷ்ய போர்க்கப்பல்கள்
உக்ரைன் நாட்டின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன.
உக்ரைனில் வாழும் ரஷ்ய தேசிய இன மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை மின்ஸ்க் ஒப்பந்தப்படி அந்நாடு வழங்கவில்லை என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. 2014,2015 ஆம் ஆண்டு மின்ஸ்க் ஒப்பந்தங்களை உக்ரைன் மதிக்கவில்லை என்பதால் ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது.
இதன்படி கடந்த ஒரு வாரமாக நடத்தி வரும் இந்த கொடூரமான யுத்தத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் அடுத்தடுத்து ரஷ்யா வசமாகி உள்ளன. உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சான் ரஷ்யா வசமானதாக அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒடேசா துறைமுகத்தைக் கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளன.
ஒடேசா துறைமுக நகரம் எந்த நேரமும் ரஷ்யா வசமாகக் கூடும் என அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இதனிடையே ரஷ்யாவின் போர்விமானங்கள் யுத்தத்தில் இறங்காதது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் ரஷ்யாவின் 5 போர் விமானங்களை அழித்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் இதனை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.