ஹோா்முஸில் தாக்கப்பட்ட மாலுமிகள் ; கப்பல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு
ஹோர்முஸ் நீரிணையில் கடந்த மார்ச் மாதம் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்குக் கப்பலில் பணியாற்றிய மூன்று மாலுமிகள், தங்களது உயிருக்கு ஆபத்து விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டி கப்பல் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியா நோக்கிப் பயணித்த ‘மயூரி நாரீ’ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல், கடந்த மார்ச் 11ஆம் திகதி ஓமனின் வடக்குப் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இந்தச் சம்பவத்தில் மூன்று மாலுமிகள் உயிரிழந்ததுடன், எஞ்சிய 20 பேர் மீட்கப்பட்டு தாய்லாந்து திரும்பினர்.

இந்த நிலையில், மாலுமிகளான பனிதி தும்கேவ், நொப்படன் வாங்சுவன் மற்றும் சுரடேஸ் மன்பியூன் ஆகியோர், ‘பிரஷியஸ் ஷிப்பிங்’ நிறுவனம், அதன் இரு துணை நிறுவனங்கள் மற்றும் கப்பலின் கேப்டனுக்கு எதிராக பாங்காக்கில் உள்ள மத்திய தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
மேற்காசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் நிலவியதை அறிந்திருந்தும், மாலுமிகளின் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான கடல் பாதை வழியாக கப்பலை இயக்க நிறுவனம் உத்தரவிட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், தாக்குதலுக்குப் பிறகு கப்பல் இயங்காத நிலை ஏற்பட்டதால், ஒன்பது மாத பணி ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்னரே தங்களை பணிநீக்கம் செய்ததுடன், வெறும் இரண்டு மாத ஊதியம் மட்டுமே இழப்பீடாக வழங்கியதாகவும் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால், இனி மாலுமி தொழிலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், தலா 30 ஆயிரம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்தும், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகமும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.