ரஷ்யாவுக்கு எதிராக இறுகும் நடவடிக்கைகள்: ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து, மேலும் 160 ரஷ்ய அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 30 நாட்களை கடந்துள்ளது. முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் துருப்புகள் துணிச்சலாக ரஷ்ய தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.
கனடா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து வருவதுடன், ரஷ்ய ஆதரவு நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் தடைகள் உள்ளிட் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் போரை நடத்தும் திறனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ரஷ்யாவிற்கு சில பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு கனடா புதிய தடைகளை விதிப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேலும் 160 ரஷ்ய அதிகாரிகளுக்கு கனடா தடை விதிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு விவகாரம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு மிகக் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படும் நிலையில், பெல்ஜியம் நாட்டில் நேட்டோ உச்சி மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த கண்மூடித்தனமான போக்கு கனடா உள்ளிட்ட நாடுகளை இராணுவத்திற்காக அதிகம் செலவிட தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.